பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பிரிக்ஸ் என்கிற கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் தலைமை வகிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் 15-வது உச்சி மாநாட்டிற்கு தென்னாப்பிரிக்கா தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறது. ஆகவே, அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உச்சி மாநாடு இன்று தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இப்பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி, “தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா அழைப்பை ஏற்று, அங்கு நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று முதல் 24-ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன்.
பிரிக்ஸ் கூட்டமைப்பானது உறுப்பு நாடுகள் மத்தியில் பல்வேறு துறைகளிலும் வலுவான கூட்டுறவை மேம்படுத்தி வருகிறது. மேலும், ஒட்டுமொத்த தென் பிராந்தியத்தின் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான களமாகவும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாகி இருக்கிறது. இந்த உச்சி மாநாடு, வருங்காலத்தில் பிரிக்ஸ் நாடுகள் எந்தெந்த துறைகளில் கூட்டுறவை மேம்படுத்தும் என்பதற்கு பயனுள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். மேலும், பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக நான் சில உலகத் தலைவர்களுடன் இரு நாட்டு நல்லுறவு குறித்து பேசவுள்ளேன்.
பிரிக்ஸ் மாநாடு முடிந்த பிறகு, கிரீஸ் நாட்டு பிரதமர் க்ரியாகோஸ் மிட்சோடகிஸ் அழைப்பை ஏற்று 25-ம் தேதி அந்நாட்டுக்குச் செல்கிறேன். பழமையான கிரேக்க தேசத்துக்கு இது எனது முதல் பயணம். அதோடு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கத்துக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையையும் பெறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின் பிங் வருகை தந்திருக்கிறார். ஆகவே, இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.