திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடந்து வரும் பக்தர்கள் தங்கள் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களைக் கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. எனவே திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்களின் உடைமைகளை வரிசையில் காத்திருந்து குறிப்பிட்ட இடத்தில் ஒப்படைத்து விட்டு, டோக்கன்களை பெற்றுச் செல்கின்றனர். சாமி தரிசனம் முடிந்து திரும்பி வந்து தங்கள் பொருட்களைப் பெற்றுச்செல்கின்றனர்.
நேர விரயத்தைத் தடுக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடந்து வரும் பக்தர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு அடிவாரங்களில் உள்ள தேவஸ்தானத்தினரிடம் ஒப்படைத்தால் அவை திருமலைக்கு வந்து சேர்ந்துவிடும். நேற்று முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது .
உடைமைகளை ஒப்படைக்கும் பக்தர்கள் பின்னர், திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், ரூ.300 சிறப்பு தரிசன மையம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் தங்கள் உடைமைகளைத் திரும்ப பெறலாம்.
பக்தர்கள் கவுண்டருக்கு வந்ததும் தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் விவரங்கள் ஆட்டோமேட்டிக் முறையில் தானாக சேமிக்கப்படும்.
தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு, அவர்களின் விவரங்கள் மற்றும் பெயரை உள்ளீடு செய்து கியூ ஆர் கோடு ஜெனரேட் செய்யப்பட்டு பையில் இணைக்கப்படும். பக்தர்களுக்கு அதே கியூஆர் கோடு கொண்ட ரசீது வழங்கப்படும். அதேபோல், மொபைல் டெபாசிட் செய்யும் போது, கியூஆர் கோடு குறியீட்டுடன் இணைத்து ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்கள் உடமைகள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .