ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகை விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.
தமிழகத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது பூ மார்க்கெட்டாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் திகழ்ந்து வருகிறது.
நிலக்கோட்டை பகுதியைச் சுற்றி அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்கள், இந்தப் பூ மார்க்கெட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் தற்போது ஸ்ரீ வரலட்சுமி விரதம் இருந்து வருகின்றனர். அதேபோல், கேரளாவில் மிக விமரிசையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, பூக்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி அதிக அளவு பூ வியாபாரிகள் பூக்களைக் கொள்முதல் செய்ய நிலக்கோட்டை பூ சந்தையில் கூடியதால், பூக்கள் விலை மேலும் அதிகரித்தது.
அதாவது, மல்லிகைப்பூ ரூ. 1,000 முதல் ரூ.1,200 வரையும், முல்லைப்பூ ரூ. 450 முதல் ரூ. 500 வரையும், ஜாதிப்பூ ரூ. 300 முதல் ரூ.350 வரையும், கனகாம்பரம் பூ ரூ. 1,000 முதல் ரூ.1,200 வரையும், செவ்வந்திப்பூ ரூ. 150 முதல் ரூ.200 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், சம்பங்கிப்பூ ரூ.450 முதல் ரூ.500 வரையும், பட்டன் ரோஸ் ரூ.250 வரையும், சாதா ரோஸ் ரூ. 150 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.