செஸ் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.
இறுதி போட்டியில் உலகில் நம்பர் 1 செஸ் போட்டியாளரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார்கள். இதில் முதலாம் சுற்று டிராவில் முடிவடைந்த நிலையில் நேற்று இரண்டாம் சுற்றில் யார் வெற்றிபெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் – பிரக்ஞானந்தா இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.
வெள்ளை காய்களுடன் ஆடிய கார்ல்சனுக்கு பிரக்ஞானந்தாவை அட்டாக் செய்வதற்கான சாதகங்கள் அமைந்திருந்தும், தொடக்கம் முதலே டிராவுக்காகவே ஆடிக்கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போட்டி, கடைசியில் டிராவில் முடிந்தது.
போட்டிக்குப் பின் பிரக்ஞானந்தா , “இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்றில் இவ்வளவு விரைவாக டிராவுக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரின் நகர்வுகள் டிராவுக்கானதாக இருந்ததை நான் அறிந்துகொண்டேன். எனக்கும் அது சரியென்று தோன்றியது. ஏனென்றால் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருகிறேன். இருந்தாலும் நாளை ஒட்டுமொத்தமாக வெற்றிக்காக விளையாட போகிறேன்.
கார்ல்சனும் விளையாடும் போது சற்று உடல் சோர்வுடனே காணப்பட்டார். நிச்சயம் டை பிரேக்கர் சுற்றுகள் சிறிய ஆட்டமாக இருந்தாலும், அதிகப்படியான ஆட்டங்கள் நடக்கும் என்று நினைக்கிறேன். அதனால் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்நிலையில் இன்று மூன்றாவது சுற்று நடைபெறுகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக சர்வதேச கவனத்தைத் தன்பக்கம் திருப்பியுள்ளார் பிரக்ஞானந்தா.
20 ஆண்டுகளுக்குப் பின் செஸ் உலகக்கோப்பையை வெல்லும் இந்திய வீரர் என்ற சாதனையைப் பிரக்ஞானந்தா படைப்பார் என்று இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.