வட கொரியாவின் உளவுச் செயற்கைக்கோளான மல்லிஜியாங்-1 சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான இரண்டாவது முயற்சி தோல்வி அடைந்ததாக வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்தில் சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து தனது முதல் உளவு செயற்கைக்கோளை வட கொரியாவின் விண்வெளி மையம் (NADA) ஏவியது. ஆனால் தனது இலக்கை அடையவில்லை. அதில் உள்ள முக்கிய காரணங்கள் கண்டறிந்து இரண்டாவது முறையாக சோலிமா -1 என்ற ஏவுகணை மூலம் மல்லிஜியாங் -1 என்ற உளவு செயற்கைக்கோளை வட கொரியா விண்ணுக்கு ஏவியது.
செயற்கைக்கோளை ஏற்றிச் சென்ற ஏவுகணை அதன் இரண்டாம்-நிலை இயந்திரத்தின் உந்துவிசையை இழந்தது. அதனால் ஏவுகணைக்கு முழுவதுமாக கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனால் இரண்டாவது உளவுச் செயற்கைக் கோளும் தோல்விஅடைந்தது.
மீண்டும் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக உளவுச் செயற்கைக்கோள் அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வடகொரியா உளவு செயற்கைக் கோள் ஏவியதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.