பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
ஜி20 அமைப்பு கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியா, தென்கொரியா, மெக்ஸிகோ, இத்தாலி, இந்தோனேஸியா, பிரேஸில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே, ஜி20 அமைப்பின் வணிக பிரிவான பி20 கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசுகையில், “முதல் காலாண்டிற்கான ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த மாதம் வெளியிடப்படும். அதன்படி, வரும் 31-ம் தேதி தேசிய புள்ளியியல் அலுவலகம் ஜி.டி.பி. விபரத்தை வெளியிட உள்ளது. கடந்த ஜூலையில் சில்லரை விலை பணவீக்கம், 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு, தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்ததுதான் காரணம்.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதே அரசின் முதன்மையான நடவடிக்கை. அதற்காக, வட்டி விகிதங்களை உயர்த்துவது மட்டுமே தீர்வாக அமையாது. பல வழிமுறைகளில் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. ஆகவே, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தின் ஒவ்வொரு அங்கமும் சிறப்பான அளவில் வளர்ந்து வருகிறது” என்றார்.