சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தடம் பதித்த பகுதிக்கு “திரங்கா” என்றும், சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு “சிவசக்தி” என்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டி இருக்கிறார்.
சந்திரயான்-3 விண்கலம் வெற்றியைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் மோடி இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை பெங்களூருவிலுள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடி, “ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்” (விஞ்ஞானம் வாழ்க, ஆராய்ச்சி வாழ்க) என்று கோஷமிட்டார். தொடர்ந்து, வழி நெடுகிலும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், இஸ்ரோ ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
பின்னர், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில்,
“நான் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தாலும், எனது மனம் முழுவதும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம்தான் இருந்தது. இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவை தொட்ட தருணம் மறக்க முடியாதது. இந்திய விஞ்ஞானிகளை உலகமே வியந்து பார்க்கிறது. நிலவில் யாரும் செய்ய முடியாதச் சாதனையை நாம் அனைவரும் இணைந்து போராடி சாதித்திருக்கிறோம். சுதந்திர அடையாளமான அசோகச் சின்னம் நிலவில் பதிக்கப்பட்டு வருகிறது.
சந்திரயான்-3 வெற்றியைக் கண்டு எனது மனம் பூரித்துப்போய் இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விஞ்ஞானிகளின் கடின உழைப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். நமது நாட்டின் பெருமையை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். சந்திரயான்-3 நிலவை ஆய்வு செய்ய புதிய வாசல்களை திறந்து விட்டிருக்கிறது. நிலவின் ரகசியங்களை நாம் கண்டறிவோம். இதன் மூலம் உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா தலைமை வகிக்கும்.
மேலும், நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியப் பகுதியை “சிவசக்தி” என்று அழைப்போம். சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகம் என்பதால், சிவசக்தி என்று அழைப்பதே சாலச்சிறந்ததாகும். மேலும், இமயம் முதல் குமரி வரை இந்தியாவை இணைக்கும் தாரக மந்திரமாக சிவசக்தி உள்ளது. பூமி என்பது பெண் சக்தியின் அடையாளமாகத் திகழ்கிறது. அதேபோல, சந்திரயான்-2 நிலவில் தடம் பதித்த இடம் “திரங்கா” (மூவர்ணம்) என்று அழைக்கப்படும். எந்தத் தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டமே “திரங்கா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
அதோடு, சந்திரயான்-3 நிலவில் தடம் பதித்த ஆகஸ்ட் 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடுவோம். வரும் காலத்தில் விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். விண்வெளி தொழில்நுட்பம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. வானியல் ஆராய்ச்சியில் இந்தியா மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்திய இளைஞர்களை தட்டி எழுப்பி இருக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.