சந்திரயான்-3 விண்கலம் வெற்றியைத் தொடர்ந்து, இன்று காலை இஸ்ரோ சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பிய நிலையில், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது. கடந்த 14-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய சந்திரயான்-3, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. தற்போது, லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுப் பணிகளை தொடங்கி இருக்கிறது.
அதேசமயம், சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியபோது பாரதப் பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவில் இருந்தார். எனினும், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை பிரதமர் மோடி காணொளி வாயிலாகக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கியதும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர் மோடி, அதன் தலைவர் சோம்நாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கிரீஸ் நாட்டிலிருந்து திரும்பிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்காக இன்று இஸ்ரோ சென்றார்.
பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
காலையில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான்-3 வெற்றியின்போது நான் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தேன். அதனால்தான் விஞ்ஞானிகளை உடனடியாக சந்திக்க முடியவில்லை.
உங்களையும், சாதனை படைத்த விஞ்ஞானிகளையும் பார்ப்பதற்கு என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எனவேதான், நாடு திரும்பியதும் உடனடியாக விஞ்ஞானிகளை சந்திக்க வந்திருக்கிறேன். நான் விஞ்ஞானிகளை சந்திக்க வருவதால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். நான் பெங்களூரு வரும்போது முறைப்படியான நடைமுறை பின்பற்றினால் போதும் என்று கூறிவிட்டேன்” என்றார்.
தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பிரதமர் மோடி புறப்பட்டார். அப்போது, சாலையின் இருபுறமும் வழி நெடுகிலும் மக்கள் நின்றிருந்தனர். ஆகவே, காரில் நின்றபடியே மக்களைப் பார்த்து கை அசைத்தபடியே பிரதமர் மோடி சென்றார். பின்னர், இஸ்ரோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, சுமார் 1 மணி நேரம் இஸ்ரோவில் இருந்து விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, விஞ்ஞானிகள் அனைவரையும் பாராட்டினார்.
அப்போது, விண்கலம் செயல்பாட்டு பணிகளைப் பற்றி பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கிக் கூறினார். மேலும், சந்திரயான்-3 லேண்டரின் சிறிய மாதிரி வடிவத்தையும், லேண்டர், ரோவர் எடுத்த புகைப்படங்களையும், நிலவின் தென் துருவத்தில் விண்கலம் எங்கு இருக்கிறது என்பது குறித்த புகைப்படங்களையம் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினர்.