நாகர்கோவில் சந்தையில் வாழைத்தார்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தியாகும் வாழைத்தார்கள், வெளிமாவட்டம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், குமரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் பயிர் செய்யப்பட்ட வாழைத்தார்கள் தண்ணீர் இல்லாமல் கருகிப் போனது. இதனால், வழக்கத்தை விட இந்த ஆண்டு வாழை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாகர்கோவில் சந்தைக்கு வரக்கூடிய வாழைத்தார்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நாகர்கோவில் சந்தையில் ஒரு மட்டி வாழைத்தார் ரூபாய் 1000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ரசக்கதலி வாழைத்தார் 300 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூபாய் 700 முதல் ரூ.900 வரை விற்பனையாகிறது. செவ்வாழை பழம் கிலோ ரூபாய் 65-க்கு விற்பனையாகிறது. ஒரு வாழைத்தார் ரூபாய் 1100 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏத்தன் பழத்தின் விலை கிலோ ரூபாய் 40-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் கன்னியாகுமரி பகுதிக்கு வந்து அதிகளவில் வாழைத்தார்கள் வாங்கி செல்கிறார்கள். இதனால் வாழைத்தார்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்