மதுரை அருகே நிகழ்ந்த இரயில் விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஆன்மீக சுற்றுலா இரயில் வந்தது. இந்த இரயில், இன்று அதிகாலை மதுரை வழியாக ராமேஸ்வரம் நோக்கி புறப்பட இருந்தது. அப்போது, இரயிலில் உள்ள சமையல் கோச்சில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து நிகழ்ந்தது. இதில், 9 பேர் பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு, மீட்பு படையினர் மற்றும் இரயில்வே படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொள்ளும் வகையிலும் 9360552608 மற்றும் 8015681915 என்ற உதவி எண்களையும் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அத்துடன், தீ விபத்தினால் மதுரை சந்திப்பு வழியாக இயக்கப்படும் அனைத்து இரயில்களும் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும், எந்த ஒரு இரயிலும் இரத்து செய்யப்படவில்லை என்றும் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.