உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நிபா வைரஸ் என்பது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் “புதிதாக வளர்ந்து வரும் ஜூனோசிஸ்” அதாவது விலங்குகளிடம் மனிதர்களுக்கு பரவும் நோய் என்பதாகும். இது மிகவும் தொற்றக்கூடிய மற்றும் கொடிய வைரஸாகும், இதற்கு தற்போது தடுப்பூசி மற்றும் சிகிச்சை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இல்லை.
இந்த வைரஸ் விலங்குகளுக்கு மனிதனுக்கும், மனிதனுக்கு விலங்குக்கும் பரவுவதைத் தவிர, இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதனுக்குமே பரவிவருகின்றது.
இந்த வைரஸ் நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், அவற்றின் கழிவுகள் என எந்த வகையிலும் நோய்த்தொற்று ஏற்படலாம். அல்லது, அவை கடித்த பழங்களை உண்பதாலும் ஏற்படலாம்.
வௌவால்கள் மூலம் குதிரை, நாய், எலி, பூனை, பன்றி என பிற வீட்டு வளர்ப்பு மனித தொடர்புடைய விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் மனிதர்களுக்குப் பரவலாம்.
இந்த வைரஸ், மனித உடலுக்குள் நுழைந்த 4 அல்லது 14 நாட்களுக்குள் பெருகி நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும். அறிகுறிகள் தொடர்ந்து பல நாட்களுக்கு இருக்கலாம். இவை அடுத்த இரண்டு வாரங்கள் வரை நீண்டு செல்லவும் வாய்ப்பு உண்டு.
பிற வைரஸ் காய்ச்சலைப் போலவே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலை தடுமாறுமும் மனதில் குழப்பமும் நிலவும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். பார்வைக் கோளாறும் ஏற்படலாம். இறுதியில், மயக்க நிலையை அடைந்து மரணம் ஏற்படும். இந்தத் துயர நிலை, நரம்பு பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே நடந்துவிடும்.
நிபா வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்தும் பிரத்தியேகமான வைரஸுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றை அழிக்கவோ, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு தற்சமயம், ரிபாவிரின் (Ribavirin) என்ற மருந்து கொடுக்கப்பட்டுவருகிறது.
இதுபோன்ற தொற்றுநோய்க் கிருமி பாதிப்பு திடீரென ஏற்படும்போது, உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனை கேட்கப்பட்டு, தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் மேற்பார்வையில் ஆய்வு நடத்தி, குறிப்பிட்ட மாநில சுகாதார அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து சிகிச்சைகள் மட்டுமல்லாது, பாதுகாப்பு, தற்காப்பு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமானது.