கோவையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு 20 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் புதிய விமானம் இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. மேலும், கோவை தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் பகுதிகளில் பெரிய பெரிய தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால், இங்குள்ள தொழில் அதிபர்கள் பலர் வியாபார ரீதியாக வெளி நாடுகளுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு எளிதாக பயணம் செய்யும் வகையில், விமானங்களை இயக்க வேண்டும் என தொழில் அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, கோவையில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு 20 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் புதிய விமானம் இயக்கப்பட உள்ளது.
கோவையில் இருந்து, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சிட்டி, லண்டன், மொரிஷியஸ், துபாய், அபுதாபி, மஸ்கட் என 20 நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளது. வரும் 15-ம் தேதி முதல் வாரத்தின் 7 நாட்களிலும் இயக்கப்பட உள்ளன.
இரவு 9.35-க்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம் 11.20-க்கு மும்பை செல்கிறது. கோவையில் இருந்து ஒரே டிக்கட் மூலம் மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு விமானம் மூலம் நாம் விரும்பும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.
ஏற்கனவே, கோவையில் இருந்து மும்பைக்கு, இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, இந்த புதிய விமானத்தையும் சேர்த்து 6-வது விமான சேவையாகும்.