3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீஞானரதன தேரர் மற்றும் மல்வத்தை தலைமை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீசித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை, இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்றார். தொடர்ந்து, கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீஞானரதன தேரர் மற்றும் மல்வத்தை தலைமை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீசித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளின் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்து நிர்மலா சீதாராமன் விவாதித்தார். தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வரக்காகொட ஸ்ரீஞானரதனா ஒப்புக்கொண்டதுடன், பொருளாதார நெருக்கடியின்போது இந்தியாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், சோலார் திட்டத்திற்கான உதவிக்கும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த வரகாகொட ஸ்ரீஞானரதனா, இது அவர்களின் ஆற்றல் தேவைகளுக்கு சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கை என்பதையும் சுட்டிக்காட்டினார்.