தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சியில் மன்னாா்புரம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பேருந்துகள் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தீபாவளி பண்டிகைக்கு பொது மக்கள் தற்போது முதலே தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சிக்கு வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
இதனால், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் மன்னாா்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும்.
தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும், சோனா, மீனா திரையரங்கம் எதிரே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் நவம்பர் 14 -ம் தேதி வரை செயல்படும்.
மேலும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படும். தற்காலிக பேருந்து நிலையங்களுக்குச் சுற்றுப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.