டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக காலிஸ்தான் தீவிரவாதி வெளியிட்டிருக்கும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பண்ணுன். இவர் சீக் ஃபார் ஜஸ்டிஸ் என்கிற பிரிவினைவாதிகள் கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெர்ற இவர், அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவர், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், சீக்கியர்கள் யாரும் நவம்பர் 19-ம் தேதிக்குப் பிறகு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம். அப்படி பயணம் செய்தால், ஆபத்து நேரிடலாம். பஞ்சாப் விடுதலை அடைந்ததும் டெல்லி விமான நிலையத்தின் பெயர் மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியா விமானத்துக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு குர்பத்வந்த் சிங் பண்ணுனை அமெரிக்காவில் கொலை செய்ய சதி நடந்ததாகவும், அந்த சதி முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இதுகுறித்து அமெரிக்கத் தரப்பில் முறைப்படி இந்தியாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
“டெல்லி பனேகா காலிஸ்தான்” (டெல்லி காலிஸ்தானாக மாறும்) என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், “2023 டிசம்பர் மாதம் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும். இத்தாக்குதல் மூலம் நாடாளுமன்றத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கப் போகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், 2001-ம் ஆண்டு டெல்லியில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி அப்சல் குருவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் 22-ம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 13-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
பண்ணுனின் மிரட்டல் வீடியோவைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. குர்பத்வந்த் சிங் பண்ணுனின் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பண்ணுன் புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டும் குற்றவாளியாவார்.
இதனிடையே, பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் கே-2 (காஷ்மீர் – காலிஸ்தான்) மேசை, இந்தியாவுக்கு எதிரான செய்திகளை பரப்புவதற்கான நிகழ்ச்சி நிரலை, பண்ணுனுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கின்றன.