கடந்த 9 ஆண்டுகளில் விமானப் பயணிகள் எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார்.
கடந்த 4-ம் தேதி முதல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது கேள்வி நேரம் நடந்து வரும் நிலையில், விமானக் கட்டணம் அதிகரிப்பு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார்.
அப்போது, “கடந்த 2014-ல் 6 கோடி போ் விமானத்தில் பயணித்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்ந்திருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயரும். விமானத் துறை எதிா்காலத்தில் 3 மடங்கு வளா்ச்சி காணும். இந்திய ரயில்வேயின் குளிா்சாதன வசதி (ஏ.சி.) முதல் வகுப்பு பெட்டிக்கு இணையாக விமானக் கட்டணம் உள்ளது” என்றார்.
இதைத் தொடர்ந்து, விடுமுறை மற்றும் விழாக் காலங்களிலும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் சூழலிலும் விமானக் கட்டணம் அதிகரிக்கிறது. ஆகவே, விமான நிறுவனங்களின் ‘நியாயமான விலை’ குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. முகமது பஷீா் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சிந்தியா, “விமானப் போக்குவரத்து ஒரு பருவகாலத் துறை என்பதால் கட்டணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்தியாவில் மட்டுமல்ல, சா்வதேச அளவிலும் இந்நிலை காணப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறை கட்டணக் கண்காணிப்புப் பிரிவைக் கொண்டிருக்கிறது.
இது தற்செயல் அடிப்படையில் 60 வழிதடங்களைக் கண்காணித்து வருகிறது. முன்கூட்டியே நீங்கள் விமானப் பயணத்துக்காக முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகமாக இருக்காது. அதோடு, விமான நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளில் 55,000 கோடி முதல் 1.30 லட்சம் கோடி ரூபாய்வரை இழப்பைச் சந்தித்திருக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று விமான நிறுவனங்களின் நிதி ஆதாரத்தைப் பாதித்திருக்கிறது. விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இயக்கச் செலவில் எரிபொருளின் பங்கு 40 சதவீதம். தற்போது இதன் விலை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. எனினும், அதற்காக விமானக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை” என்றார்.