ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்த மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், புதிதாகத் திருத்தப்பட்ட குற்றவியல் சீர்திருத்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் இன்று தாக்கல் செய்திருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை, முறையே பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நயாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷியா 2023 என பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
மேலும், இச்சட்டங்களில் சில திருத்தங்களையும் செய்து கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், ஆகஸ்ட் மாதம் நடந்த 11-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் அறிமுகப்படுத்தினார். ஆனால், இச்சட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
மேலும், இந்த புதிய மசோதாவில் விபச்சாரம், ஓரினச் சேர்க்கை ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இருப்பதால், மேற்கண்ட இரு விவகாரங்களிலும் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்தது.
இதையடுத்து, மேற்கண்ட 3 மசோதாக்களும் திரும்பிப் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். பின்னர், மேற்கண்ட 3 புதிய மசோதாக்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட குற்றவியல் சீர்திருத்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த புதிய மசோதாக்களில் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் மக்களவையில், 14-ம் தேதி நடைபெறுகிறது.