புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இம்மசோதை தோல்வியடைந்தது. இதன் பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றங்களில் அறிமுகப்படுத்தப்பட்டும் தோல்வியிலேயே முடிவடைந்தது.
இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியது. அப்போது, இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம், இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் பின்னர், இம்மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலை பெற்ற பிறகு சட்டமாக்கப்பட்டது. எனினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்த பிறகே, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய நித்யானந்த் ராய், “முகலாயர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் நாட்டில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் முன்னேற வாய்ப்பளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு உரிய மரியாதையும், சரியான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தங்களின் அறிவு மற்றும் திறமையால் பெண்கள் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர்” என்றாா். இதைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.