நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேர் மீதும், கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த சூழலில், கூட்டத்தொடரை பார்வையிடுவதற்காக வந்திருந்த 2 பேர், திடீரென எம்.பி.க்கள் இருந்த பகுதியில் குதித்தனர்.
கோஷ்ம் எழுப்பியவாறே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடியவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தி பிடித்தனர். அப்போது, கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை இருவரும் வீசினர். இதனால், எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இருவரும் அவைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல, இச்சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த இருவர், கோஷம் எழுப்பிவாறு மஞ்சள் நிற புகையைக் கக்கும் குண்டுகளை வீசினர்.
இதையடுத்து, அந்த இருவரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன், ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த நீலம் தேவி, மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கிரிமினல் சதி, அத்துமீறல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், இவர்களின் பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என்று டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, 4 பேரின் கல்விப் பின்னணி, கடந்த கால நடவடிக்கை, சமூக ஊடக செயல்பாடுகளையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
உபா சட்டம் என்பது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமாகும் (Unlawful Activities (Prevention) Act (UAPA). இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் 1967-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம்தான் உபா சட்டம். இச்சட்டத்தின் கீழ், எழுத்து மூலமாகவோ, பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் வழக்குப் பதிவு செய்யலாம்.