அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கொலராடோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்று 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனால், அவர் தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார்.
இந்த சூழலில், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால், போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், அதிபர் பதவியில் தோல்வியுற்ற பின்னர் வெள்ளை மாளிகையை காலி செய்த டொனால்ட் ட்ரம்ப், முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மேற்கண்ட போராட்டத்தில் டொனால்டு ட்ரம்ப்புக்கு பங்கு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
மேலும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குச்சீட்டிலும் ட்ரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது. அப்படியே இடம் பெற்றாலும் அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் செல்லாது என்று தெரிவித்திருக்கிறது. எனினும், அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடை விதிக்கப்படவில்லை. மேலும், இத்தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி வரை தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.