ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை, இன்னும் 4 வாரங்களுக்கு பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி முகலாய அரசர் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் 17-ம் நூற்றாண்டில் இந்துக் கோவில்களை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று இந்துக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆகவே, மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்து சமூகத்தைச் சேர்ந்த சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து மசூதி நிர்வாகத் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
ஆனால், வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க 2 நீதிமன்றங்களும் மறுத்து விட்டன. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஞானவாபி வளாகத்தில் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த 5 மாதங்களாக ஆய்வு நடத்தினர். அப்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்துக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் பின்னர், மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் 18-ம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த சூழலில், மசூதி ஆய்வு விவகாரம் தொடர்பான வழக்கு, வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை, இன்னும் 4 வாரங்களுக்கு பொது வெளியில் வெளியிட வேண்டாம் என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இத்தகவலை இந்து அமைப்பு தரப்பின் வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ் தெரிவித்திருக்கிறார். அதாவது, ஞானவாபி வளாகத்தின் பராமரிப்பை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொல்லியல் துறை மேலும் ஆய்வு நடத்த கீழமை நீதிமன்றம் அனுமதி வழங்கலாம் என்று கூறியிருந்தார்.
இதனடிப்படையில் ஆய்வறிக்கையை 4 வாரங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று தொல்லியல் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.