இன்ஸ்டாகிராம் பயனாளர்களிடம் இனி அளவுக்கு அதிகமான அரசியல் பதிவுகள் பரிந்துரைக்கப்படாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக இன்ஸ்டாகிராமில், எக்ஸ்ப்ளோர் (Explore), ரீல்ஸ் (Reels) ஆகிய வசதிகளில் நாம் பின்தொடராத கணக்குகளிலிருந்து பதிவுகள் தானாக பரிந்துரைக்கப்படும். ரீல்ஸ்-களில் நாம் பின்தொடராத கணக்குகளின் பதிவுகள் நமது செயல்பாட்டின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும்.
அதாவது, லைக் செய்த பதிவுகள், கமெண்ட் செய்த பதிவுகளை கருத்தில் கொண்டு அந்த பக்கங்களை நாம் பின்தொடராவிட்டாலும், அந்த பக்கத்தின் பதிவுகள் நமக்கு பரிந்துரைக்கப்படும்.
இந்த வசதியில், அரசியல் சார்ந்த கருத்துக்களைக் கொண்ட பதிவுகள் பரிந்துரைக்கப்படாது என இன்ஸ்டாகிராம் தனது பிலாக் (Blog) பதிவு ஒன்றில் விளக்கியுள்ளது.
பெரும்பான்மை மக்கள் கேட்டுக்கொண்டதையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் அரசியல் சார்ந்த பக்கங்களை நாம் பின்தொடர்ந்தால் அந்த பக்கங்களின் பதிவுகள் எந்தத் தடையிமின்றி நமக்கு காட்டப்படும் என இன்ஸ்டாகிராம் தெளிபடுத்தியுள்ளது.
மேலும், அரசியல் பதிவுகள் பரிந்துரைக்கப்படுவதை விரும்பும் பயனாளர்கள் அதை அனுமதித்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்படும் என மெட்டாவுக்கு சொந்தமான இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல், த்ரெட்ஸ் (Threads) தளமும் இந்த வழிமுறையைப் பின்பற்றவுள்ளது. பேஸ்புக்கில் விரைவில் இந்த வசதி கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய பதிவுகள் நிறைய பேருக்கு பரிந்துரைக்கப்படுகிறதா என்பதைப் பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
ஒருவேளை உங்கள் பதிவுகள் பரிந்துரைப்புக்குத் தகுதி இல்லை எனக் காட்டப்பட்டால், நீங்கள் பதிவிட்ட அரசியல் பதிவுகளை நீக்கியபின் மீண்டும் பரிந்துரைக்கப்படும் பதிவுகளின் வரிசையில் உங்கள் பதிவுகளும் இடம்பெறும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.