கோயம்பேடு பேருந்து நிலையம் அவசர அவசரமாக மூடப்பட்டதன் காரணம் குறித்த பொதுமக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதில் தமிழக அரசு எந்த அளவுக்கு தோல்வி அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையம் அவசர அவசரமாக மூடப்பட்டதன் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டிஆர்.பாலு தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சியின் போது நிதி நிலைமை எவ்வாறு மோசமாக இருந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார்.
தமிழக அரசுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. முதலில் அந்த தொகையை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.