ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
மேலும் புதுதில்லியில் ஒருங்கிணைந்த வளாகமான “கர்மயோகி பவன்” கட்டடத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த வளாகம் கர்மயோகி இயக்கத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவதாகக் கூறினார். வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
அரசில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான இயக்கம் முழு வீச்சில் தொடர்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு இடையில் நீண்ட கால விரயம், முறைகேடு அதிகரிப்பதற்கு வழிவகுத்தது என்பதை சுட்டிக்காட்டியவர், தற்போதைய அரசு முழு செயல்முறையையும் வெளிப்படையானதாக ஆக்கியுள்ளது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆட்சேர்ப்பு செயல்முறையையும் நிறைவு செய்துள்ளது என்றார். இது ஒவ்வொரு இளைஞருக்கும் தங்கள் திறன்களை வெளிப்படுத்துவதில் சமமான வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது என்று அவர் கூறினார்.
“இன்று, ஒவ்வொரு இளைஞரும் கடின உழைப்பு மற்றும் திறன்களால் தங்கள் வேலையை உறுதிப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களைப் பங்கெடுப்பாளர்களாக மாற்ற அரசு பாடுபடுகிறது என்பதை எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டுகளில், முந்தைய அரசுகளை விட தற்போதைய அரசு 1.5 மடங்கு அதிகமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
புதுதில்லியில் ஒருங்கிணைந்த வளாகமான ‘கர்மயோகி பவன்’ முதல் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது குறித்தும் குறிப்பிட்டார். திறன் வளர்ப்பை நோக்கிய அரசின் முன்முயற்சியை இது வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அரசின் முயற்சிகள் காரணமாக புதிய துறைகள் உருவாக்கப்படுவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்துப் பேசிய பிரதமர், பட்ஜெட்டில் 1 கோடி அளவுக்கு மேற்கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவது பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டம் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கூறினார்.
சுமார் 1.25 லட்சம் புத்தொழில் நிறுவனங்களைக் கொண்ட உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டவர், இந்த புத்தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை 2-ம் நிலை அல்லது 3-ம் நிலை நகரங்களைச் சேர்ந்தவை என்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தப் புத்தொழில் நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவதால், சமீபத்திய பட்ஜெட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் கோடி நிதி பற்றியும் குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்பு முகாம் மூலம் ரயில்வேயில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், பயணம் மேற்கொள்ளும்போது சாமானிய மக்களின் முதல் தேர்வாக ரயில்வே உள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
இந்தியாவில் ரயில்வே துறை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது என்றும், அடுத்தப் பத்தாண்டுகளில் இத்துறை முழுமையான மாற்றத்தைக் காணும் என்று கூறினார்.
2014-ம் ஆண்டுக்கு முன் ரயில்வே துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், மின்மயமாக்கல், ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல், புதிய ரயில்களைத் தொடங்கி வைத்தல், பயணிகளுக்கான வசதிகளை அதிகரித்தல் ஆகியவை பற்றி குறிப்பிட்டார்.
ஆனால் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, ரயில்வேயை நவீனமயமாக்குதல், மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஒட்டுமொத்த ரயில் பயண அனுபவத்தையும் புதுப்பித்துக் கொள்ளும் இயக்கம் தொடங்கப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பட்ஜெட் மூலம் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் இருப்பது போன்ற 40,000 நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சாதாரண ரயில்களுடன் அவை இணைக்கப்படும் என்றும், இதனால் பயணிகளுக்கு வசதிகள் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த இணைப்பின் தொலைநோக்கு தாக்கத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், புதிய சந்தைகள், சுற்றுலா விரிவாக்கம், புதிய வர்த்தகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்பின் காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கம் பற்றியும் குறிப்பிட்டார்.
“வளர்ச்சியை விரைவுபடுத்த உள்கட்டமைப்பில் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறியவர், சமீபத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
புதிய ரயில், சாலை, விமான நிலையங்கள் மற்றும் நீர்வழித் திட்டங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
துணை ராணுவப் படைகளில் பெரும்பாலானவை புதிய நியமனங்களாக உள்ளன என்று குறிப்பிட்டவர், துணை ராணுவப் படைகளுக்கான தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்துவதாக கூறினார்.
இந்த ஜனவரி மாதம் முதல் இந்தி, ஆங்கிலம் தவிர 13 இந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும்.
எல்லைப் பகுதி மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது குறித்தும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் பயணத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பை பிரதமர் சுட்டிக் காட்டினார். “இன்று இணைந்துள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், இந்தப் பயணத்திற்கு புதிய சக்தியையும், வேகத்தையும் அளிப்பார்கள்” என்று கூறினார்.
ஒவ்வொரு தினத்தையும் தேச நிர்மாணத்திற்காக அர்ப்பணிக்குமாறு அவர் புதிய ஊழியர்களை கேட்டுக் கொண்டார்.
800-க்கும் அதிகமான பாடத்திட்டங்களையும், 30 லட்சம் பயனாளர்களையும் கொண்டுள்ள வேலைவாய்ப்புக்கான கர்மயோகி எனும் இணைய தளம் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தவர், இதன் முழுப் பயனையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.