தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருப்பது வன்னியர்களுக்கு சமூகநீதியை மறுக்க, திமுக அரசும், ஆணையமும் இணைந்து நடத்தும் நாடகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டிருப்பதாகவும், இது வன்னியர்களுக்கு சமூகநீதியை மறுக்க, நடத்தப்படும் நாடகம் என்றும் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு கடந்த ஆண்டில் ஆணையிட்டதை சுட்டிக் காட்டியுள்ள அவர், ஆனால் அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் 15 மாதங்கள் வரை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்ட 18 மாத காலகெடுவும் ஜூலை 11ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தான் மீண்டும் ஓராண்டு கூடுதல் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் விவரித்துள்ளார்.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ள ராமதாஸ், தமிழக அரசும், ஆணையமும் இணைந்து வன்னியர் சமூகநீதிக்கு எதிராக நடத்தும் நாடகம் தான் இது எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
வன்னியர்களால் வளர்ந்த திமுக வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இதற்காக திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.