டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதுபான கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த பணத்தை வைத்து ஆம் ஆத்மி கட்சி கோவா சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொண்டதாக சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
அந்த வகையில், கோவாவில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளருக்கு தலா 90 லட்ச ரூபாய் அக்கட்சி வழங்கியதாகவும், இதற்கு முகாந்திரம் இருப்பதாகவும் சிபிஐ வாதிட்டது.
இந்த வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, கூடுதல் குற்றப் பத்திரிகையை அன்றைய தினம் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.