அடுத்த மாதம் 2-ஆம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று, அனைத்து உறுப்பினர்களும் தங்களது உறுப்பினர் சேர்க்கை அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடிக்கும் கட்சியின் தேசிய தலைவர் உறுப்பினர் அட்டை வழங்கவுள்ளதாக கூறிய வினோத் தாவ்டே, கடந்த 2014-ஆம் ஆண்டுவரை சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக இருந்ததாகவும், 11 கோடி உறுப்பினர்களை எட்டியதும் அந்த சாதனையை பாஜக முறியடித்துவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
உறுப்பினர் சேர்க்கை என்பது கட்சியினருடன் தொடர்புகொள்ளும் நிகழ்ச்சி மட்டுமன்றி,பாஜகவின் சித்தாந்தத்தையும், சாதனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு என்றும் வினோத் தாவ்டே தெரிவித்தார். முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் அடுத்த மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.