திருச்சி NIT கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதி காப்பாளர் சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதையடுத்து மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திருவெறும்பூரில் உள்ள NIT கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவரிடம் கல்லூரியின் ஒப்பந்த பணியாளரான கதிரேசன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ந்த மாணவி இதுகுறித்து சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறியபோது அவர் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. வருண்குமார் விடுதி நிர்வாகத்திடம் பேச்சுவாரத்தை நடத்தினார்.
இதனையடுத்து விடுதியின் காப்பாளர் பேபி மாணவிகளிடம் மன்னிப்பு கோரியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கதிரேசனை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.