இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாம்சங்கின் கோட்டை படிப்படியாக குறைந்து வருகிறது. ஏறக்குறைய ஆறு காலாண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் சியோமி தென்கொரியாவின் சாம்சங்கை விஞ்சி, இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் Xiaomi இன் ஏற்றுமதி ஆண்டுதோறும் 24 சதவீதம் அதிகரித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் 4 சதவீத வளர்ச்சியைக் காணும் Vivo, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சாம்சங்கின் ஏற்றுமதி 8 சதவீதம் சரிந்ததால் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மற்றைய சீன பிராண்டுகளான Realme மற்றும் Oppo முறையே 12 சதவீதம் மற்றும் 11 சதவீதம் அளவு பங்குகளுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
சீன போட்டியாளர்களான Xiaomi மற்றும் Vivo ஆகியவை சிறந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருக்கு சவால் விடுகின்றன. இது சாம்சங்கின் சந்தைப் பங்கை 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சியடைய வழிவகுத்திருக்கிறது.
இது குறித்து, Xiaomi இந்தியாவின் தலைவர் பி முரளிகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தை மீட்டெடுப்பது பெருமைப்படும் ஒரு சாதனை என்றாலும், தங்கள் முன்னுரிமை தரவரிசைக்கு அப்பாற்பட்டவை என்றும், இந்தியாவைப் பற்றிய ஆழமான புரிதலும் தங்கள் தேர்ந்த தொழில்நுட்ப வலிமையும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சாம் சங்கின் இந்த வீழ்ச்சிக்கு பிராண்ட் மீதான ஈர்ப்பு குறைந்தது, சீன பிராண்டுகளின் தீவிர போட்டி மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுடன் ஏற்பட்ட சிக்கல் ஆகியவை சாம்சங்கின் சரிவுக்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாகவே சாம்சங் தனது விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் மூலம் சந்தையில் முன்னணியில் இருந்து வந்தது. அதே நேரத்தில் Xiaomi மற்றும் Vivo குறைந்த விலை ஸ்மார்ட்போன் பிரிவில் தங்கள் ஆதிக்கத்தை வலிமையாக செலுத்தி வந்தன.
மலிவு விலை போன்களுக்கு பெயர் பெற்ற Xiaomi, இப்போது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரீமியம் கைபேசி சந்தையிலும் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மேலும் 10,000 ரூபாய்க்கு கீழுள்ள ஸ்மார்ட் போன் சந்தையில் சாம்சங் வெறும் 3 சதவீதம் மட்டும் வைத்துள்ளது. 30000 ரூபாய்க்கு கீழுள்ள ஸ்மார்ட் போன் வரிசையில் சாம்சங் மிக குறைந்த செயல் திறன் கொண்ட போன்களையே வைத்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் ஆப்பிளின் எழுச்சி மற்றும் பிரீமியம் பிரிவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள், பிரீமியம் பிரிவிலும் சாம் சங்கை திக்கு முக்காட வைத்திருக்கிறது.
இந்த வீழ்ச்சியில் இருந்து சாம் சங் மீண்டெழ அதிக காலமாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளான Xiaomi, Vivo, Oppo, Realme, Transsion மற்றும் Motorola ஆகியவற்றின் ஒட்டுமொத்த சந்தை பங்கு 75 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.