தமிழகத்தின் அத்திபள்ளி வழியாக ஓசூர் முதல் கர்நாடகாவின் பொம்மசந்திரா வரை விரைவான மெட்ரோ ரயில் போக்குவரத்தை (MRTS) அமைப்பதற்கான விரிவான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக, மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த மெட்ரோ திட்டத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தமிழகத்தின் ஓசூருக்கும், பெங்களூருவின் பொம்மசந்திராவிற்கும் இடையே 6,900 கோடி ரூபாய் செலவில், மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வசிப்பிட அமைச்சகத்தின் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசின் (GoTN) ஆணைக்கு இணங்க இந்த திட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்த ஆய்வின் ஒரு பகுதியாக, ஓசூர் பகுதிகளை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்காக, சென்னை மெட்ரோவின் மேலாண்மை இயக்குநர், பெங்களூர் மெட்ரோவின் மேலாண்மை இயக்குநரை பெங்களூரில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை உள்ள மெட்ரோ திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்திப்பள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை சுமார் 23 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மெட்ரோ இரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இதில் 11 கிலோமீட்டர் தூரம் தமிழகத்திலும், மீதமுள்ள 12 கிலோமீட்டர் தூரம் கர்நாடகாவிலும் அமைகிறது. இந்த மெட்ரோ ரயில் பாதையில் மொத்தம் 12 மெட்ரோ ரயில் நிலையங்களும், ஒரு பணிமனையும் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ பாதை, பெங்களூரு புறநகர் இரயில் மற்றும் பேருந்து நிலையங்களையும் இணைக்கும் என்றும், பெங்களூரு விமான நிலைய பாதையுடனும் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிய வருகிறது.
ஓசூர் மற்றும் பெங்களூர் இடையேயான இந்த மெட்ரோ சேவையால் போக்குவரத்து இணைப்பு மேம்படுத்தப்படும் என்றும், இருமாநில மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட பலதரப்பட்ட மக்களும் எளிதாக பயணம் மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் இருந்து சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஓசூர். பெங்களூருவை விட சிறப்பான சாலைகள் மற்றும் குறைவான போக்குவரத்துடன் ஓசூர் உள்ளது.
ஆகவே இந்த ஓசூர்-பொம்மசந்திரா மெட்ரோ இணைப்பு ஓசூரின் பொருளாதார வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப் படுகிறது.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், ஓசூர் பெங்களூருவை விட பொருளாதாரத்தில் வளர்ந்து விடும் என்பதால், கர்நாடகா இந்த திட்டத்துக்கு முறையான ஒத்துழைப்பைத் தராமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது. சில கன்னட அமைப்புகளும், நகர்புற வளர்ச்சி வல்லுநர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மெட்ரோ திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், பெங்களூருவின் பொருளாதார நலன் பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எதிர்ப்பு ஏற்படும் பட்சத்தில் நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நெட்வொர்க்குகளின் தாய் அமைப்பான MoHUA, ஓசூர்-பொம்மசந்திரா மெட்ரோ இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தரும் பணிகளை மேற்கொள்ளும் என்று சென்னை மெட்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.