திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அக்ரஹாரம் வேடிவட்டம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் தனது மனைவி ஈஸ்வரியுடன் வேலூருக்கு சென்றார். இந்நிலையில் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை செல்போனை கொண்டு தேவேந்திரன் ஆராய்ந்தார்.
அப்போது 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து தேவேந்திரனின் வீட்டுக்கு வந்த உறவினர்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பியோடிய நிலையில் ராஜா என்பவருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து மயக்கமடைந்த ராஜா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கழிவறைக்கு செல்வதாக கூறி, ஜன்னல் வழியாக ராஜா தப்பியோடினார். காவல்துறையினரின் அலட்சியத்தால் கொள்ளையன் தப்பியோடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.