லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது.
கடந்த 27ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பலியானார்.
அதன்பிறகும் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 10 நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கியமான 6 தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களின் பல்வேறு ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில், லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தனது தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தரை வழித்தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.