முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்வரத்து ஆயிரத்து 719 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 456 கன அடியாகவும், அணையின் இருப்பு 2 ஆயிரத்து 648 மில்லி கன அடியாகவும் இருந்து வருகிறது.
இதேபோல், சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து 204 கன அடியாகவுள்ளதால், அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அதன் முழு கொள்ளளவை எட்டியதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்த நிலையில், அந்த தடை 2-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.