தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில் ஜவுளிக் கடைகள், பட்டாசு கடைகள் எனப் பல்வேறு கடைகளிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால், ரெடிமேடு ஆடைகள் உற்பத்தி அதிகரிப்பாலும், ஆன் லைனில் நடக்கும் ஆடை வியாபாரத்தாலும் தீபாவளி பண்டிகை கால சீசனில்கூட தையல்காரர்கள் பலர் வேலையின்றி தவிக்கின்றனர். இது பற்றிய செய்தி தொகுப்பை பார்ப்போம்…
தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தையல் கடைகள் தயாராகி விடும். டெய்லர்கள் 24 மணி நேரமும் வேலை பார்க்க, தையல் கடைகளில் புத்தாடைகள் அணிவகுத்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. ரெடிமேடு ஆயத்த ஆடைகள் உற்பத்திகள் அதிகரித்து விட்டன.
சந்து பொந்துகளில் எல்லாம் ரெடி மேடு ஆடைகளை விற்பனை செய்யும் கடைகள் முளைத்துவிட்டன. ஆன்லைன் மூலமும் ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ளும் இந்தக் கால கட்டத்தில், தீபாவளி பண்டிகை சீசனிலும் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலுக்கு டெய்லர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததால் பல தையல் கடைகள் காற்றாடிக் கொண்டிருக்கின்றன. தீபாவளி சீசனில் இரவு பகலாக தையல் கடைகள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இருக்கும் சில தையல் கடைகளும் பகல் நேரங்களில் மட்டுமே செயல்படுகின்றன
தையல் கட்டணத்திலேயே ரெடிமேடு ஆடைகளை வாங்க முடிவதால் பெரும்பாலோனோர் அவற்றை தேடியே செல்கின்றனர். பல கட்டண சலுகைகளை கொடுக்கும் ஆன்லைனிலும் ஆடைகளை வாங்கிக் கொள்வதால் தையல் கடைகள் வேலையின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
குறிப்பாக பல பெண்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த டெய்லரிங் தொழில் இன்று அவர்களது வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது. நூல், கேன்வாஸ் உட்பட்ட தையல் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு , கடை வாடகை, ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவையும் தையல்காரர்களுக்கு பெரும் பாரமாய் இருக்கிறது.
அதற்கேற்ப தையலுக்கான கட்டணமும் நிர்ணயிக்க முடியாத நிலையில் பலர் அந்த தொழிலையே விட்டுவிட்டு பெயிண்டிங், கட்டிட தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் காலங்களில் டெய்லர் என்பதை கூகுளில் தேடினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. “கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கு இல்லை ஒத்துக் கொள்” என்ற பாடல் டெய்லர்களின் வாழ்வில் வெறும் சொல்லாகவே இருப்பதும் வேதனையிலும் வேதனை…