சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு செல்வதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பழனி தேவஸ்தான தங்கும் விடுதியில் இரவு தங்கிய திருமாவளவன் இன்று அதிகாலையில் பழனி மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்திற்கு சென்ற திருமாவளவன் தொட்டிச்சி அம்மனை வழிபாடு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டப்பட்டது, பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது உள்ளிட்டவை வருத்தமளிப்பதாக தெரிவித்தார். இது போன்ற செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்குச் செல்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 20223 ஆம் ஆண்டு ரேஷன் அரிசி கடத்தலால் 1900 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறினார் என தெரியவில்லை என்றும், அவ்வாறு அவர் தெரிவித்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக தடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஒத்துழைப்போடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும் போது அது நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.