சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் உலக கேரம் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை குறித்து, காங்கிரஸ் மன்றக்குழு தலைவர் திரவியம் பேசி கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரினார். இதற்கு திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உமா ஆனந்த், நேரமில்லா நேரம், கேள்வி நேரம் என எப்போதும் தனக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், பாஜக என்பதால் தன்னை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடியின் வெற்றியை ஏன் தீர்மானமாக நிறைவேற்றவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.