வங்க தேசத்தில் நடக்கும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ( Barry Gardiner ) பேரி கார்டினர் மற்றும் பிரித்தி படேல் ஆகியோர் கடும் கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் கீழ், வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன. வங்கதேசத்தில் இந்து துறவிகள் கைது செய்யப்படுவது, இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது, இந்துக் கோயில்கள் அழிக்கப்படுவது, இந்துக்களின் உடைமைகள் உடைக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஏற்கெனவே, வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களின் உரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, வங்க தேச அரசை வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சின்மய் கிருஷ்ணா தாஸ் பிரம்மசாரியின் வழக்கறிஞர் ராமேன் ராய் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவரது வீட்டை சூறையாடிய தீவிரவாத இஸ்லாமியர்கள், அவர் மீதும் கொலை வெறி தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த ராமேன் ராய், தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு போராடி வரும் ராமேன் ராய், மருத்துவ மனையில் சிகிச்சை எடுக்கும் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சர்வ தேச அளவில், வங்க தேசத்தில், திட்டமிட்டு, இந்துக்களைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் இந்து அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை , பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் வங்க தேச இந்துக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பப் பட்டது.
வங்க தேசத்தின் நிலைமை மற்றும் இந்துகள் மீதான வன்முறை தாக்குதல்கள் குறித்த விரிவான அறிக்கையை வழங்குமாறு, வெளியுறவு மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளரிடம் கேட்டுக் கொள்ளப் பட்டது.
கடந்த ஆகஸ்ட் முதல், வங்கதேசம் முழுவதும் 2,000 மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், சிறுபான்மை இந்துக்களையே குறிவைத்து வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ( Barry Gardiner ) பேரி கார்டினர் கூறியிருக்கிறார்.
மேலும், தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புக்கள், இந்துக் கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதையும், இடைக்கால அரசின் அதிகாரிகள் இந்த வன்முறை சம்பவங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காததையும் ( Barry Gardiner ) பேரி கார்டினர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
மேலும், சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட ( Barry Gardiner ) பேரி கார்டினர், வங்க தேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்றும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
பேரி கார்டினருக்கு பதிலளித்த வெளியுறவு மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான துணை செயலாளர் கேத்தரின் வெஸ்ட், நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
வன்முறையின் தீவிரம் ஆழமாக வங்க தேசத்தின் பல இடங்களில் கட்டுப்பாடற்ற வன்முறை பரவுவதை திகிலுடனும் அதிர்ச்சியுடனும் பார்ப்பதாக கூறிய கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரித்தி படேல், மத சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இங்கிலாந்து அரசால் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள பட்டன என்று கேள்வி எழுப்பினார் .
நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் உள்துறை செயலராக பணியாற்றிய போது இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் வழிகாட்டுதலைப் பின்பற்றியே பணியாற்றினேன் என்று பிரித்தி படேல் கூறிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல், பொது விவகாரத் துறையில் செய்த பங்களிப்புகளுக்காக ( Barry Gardiner ) பேரி கார்டினருக்கு, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், கடந்த ஆகஸ்ட் முதல் வங்க தேசத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கண்டித்ததோடு, வங்க தேசத்தில் சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பது அந்நாட்டு இடைக்கால அரசின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சுழலில், திரிபுராவின் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை துாதரக அலுவலகம் முன்பு பல்வேறு இந்து அமைப்புக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துாதரக அலுவலகத்துக்குள் சிலர் நுழைய முயன்ற எதிர்பாராத சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள வங்க தேச தூதரகம் மற்றும் தூதரக உயர் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.