இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பைத் தொலைபேசியில் அழைத்து பேசாததே காரணம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் (Howard Lutnick) ஹோவர்ட் லூட்னிக் தெரிவித்துள்ளார். இது உண்மையா ?
சில நாட்களுக்கு முன் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆண்டு மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனிப்பட்ட முறையில் தன்னுடன் மிகவும் நல்ல உறவு கொண்டிருந்தாலும், இந்தியா மீது தான் விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் தம் மீது பிரதமர் மோடி வருத்தத்தில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அடுத்த சில நாட்களில், பிரதமர் மோடி சிறந்த மனிதர் என்று பாராட்டிய அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என்பது அவருக்குத் தெரியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தம்மை திருப்திப்படுத்துவது முக்கியமாக இருந்ததால், இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொண்டு ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளது என்றும் கூறினார்.
கூடுதலாக, தாம் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்குத் தெரியும் என்றும், தம்மை மகிழ்ச்சியடையச் செய்ய விட்டால், மேலும் வரிகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று கூறிய அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா சீனா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீத வரிவிதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தச்சூழலில், Chamath Palihapitiya வின் All-In Podcast நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க வர்த்தகச் அமைச்சர் (Howard Lutnick) ஹோவர்ட் லூட்னிக், இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பை வர்த்தக கொள்கை சார்ந்து எடுக்காமல் தனது ஈகோ-வினால் ட்ரம்ப் எடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தயாராக இருந்ததாகவும் இறுதி முடிவு எடுக்க, பிரதமர் மோடி தம்மை அழைப்பார் என்று ட்ரம்ப் எதிர்பார்த்து, 21 நாட்கள் காத்திருந்ததாகவும் Howard Lutnick கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ட்ரம்பை அழைத்துப் பேசிய மறுநாளே பிரிட்டனுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாகச் சுட்டிக் காட்டியுள்ள Howard Lutnick, பிரதமர் மோடி ட்ரம்பை அழைத்துப் பேசாததால், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் அமெரிக்கா செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச நான்கு முறை முயற்சி செய்ததாகவும், ஆனால் பிரதமர் மோடி அவருடன் பேச மறுத்துவிட்டார் என்றும் ஜெர்மனியை சேர்ந்த பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் என்ற நாளிதழ் தெரிவித்திருந்தது.
கடந்த அக்டோபர் மாதம், இந்தியாவின் எரிசக்தி ஒப்பந்தங்கள் சந்தையில் கிடைக்கும் வாய்ப்புகளையும் இந்திய நுகர்வோரின் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன என்று கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தற்காலிக அழுத்தத்தின் கீழ் ஒரு ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடமே இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
மேலும், பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கும் இந்தியா அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்வதில்லை என்று தெளிவு படுத்திய பியூஷ் கோயல், காலக்கெடுவுடனோ அல்லது தலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டோ இந்தியா ஒப்பந்தங்களைச் செய்வதில்லை,” என்றும் கூறியிருந்தார்.
இப்போது, வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு பிரதமர் மோடி, ட்ரம்பை அழைத்துப் பேசாததே காரணம் என்பதைப் பொதுவெளியில் தெரிவித்துள்ள அமெரிக்க வர்த்தக துறை செயலாளர் Howard Lutnick இந்தியா இதைச் சரி செய்து கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடங்கியது குறித்த அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக்கின் கருத்துக்களை மறுத்துள்ள இந்தியா, அவரின் கருத்துக்கள் தவறானவை என்றும் கூறியுள்ளது.
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், கடந்தாண்டு மட்டும் இருவரும் எட்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளனர் என்றும் உறுதிப்படுத்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஒவ்வொரு முறையும் இருநாட்டு கூட்டாண்மைக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி முதலே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த உறுதியுடன் இருந்த இருநாடுகளும், சமநிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்காகப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இந்தியா விரும்புவதாகவும், பதற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் முன்னணி நாடாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக அமெரிக்கா விளங்குகிறது.
இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 131.84 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது இந்தியாவின் மொத்தப் பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 18 சதவீதமும், இறக்குமதியில் 6.22 சதவீதமும் மற்றும் மொத்த வர்த்தகத்தில் 10.73 சதவீதமும் அமெரிக்காவுடன் உள்ளது.
















