இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால்பதிக்க முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று கரூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், கோவை மக்கள் தங்கள் ஊரைத் தவிர மற்ற எல்லா ஊர்களையும் கெடுப்பார்கள் எனக் கொங்கு மக்களின் மீது தனக்குள்ள மொத்த வன்மத்தையும் கொட்டியுள்ளார் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் என தெரிவித்துளளார்.
அதைக் கொஞ்சம் கூட கூசாமல் ரசித்து மகிழ்கிறார் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த செந்தில் பாலாஜி என்றும், அதுசரி ஊரை அடித்து உலையில் போடும் கோபாலபுரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கண்களுக்கு, மற்றவர்களும் ஊரைக் கெடுப்பவர்கள் போலத் தானே தெரியும்? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் காலங்காலமாக திமுகவால் முழுமையாகக் கைப்பற்ற முடியாத சிம்மசொப்பனமாகத் திகழும் கோவை மாவட்டத்தின் மீது, உடன்பிறப்புகளுக்கு அளவுகடந்த ஆத்திரம் இருப்பது இயல்பானது தானே? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவறான திட்ட அறிக்கை மூலம் கோவை மாவட்டத்திற்கான மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவாலய அரசு முடக்கி வைத்ததற்கான காரணம் இப்போது தெரிகிறதா? தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையை, ஊரைக் கெடுப்பவர்களின் ஊர் என்று பொதுவெளியில் அவதூறாகப் பேசுமளவிற்கு ஆணவம் தலைக்கேறிய திமுகவினர், இனி எந்த ஜென்மத்திற்கும் கோவை மண்ணில் கால்பதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தயாநிதிதமது பிளவுவாத பேச்சிற்கு உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நயினார் வலியுத்தியுள்ளார்.
















