உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு நடைபெற்றது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 11 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியது. கூட்டத்தில் பிரதமர் மோடி பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, வளர்ந்து வரும் பொருளாதார சூழலுக்கு மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரிக்ஸ் ஒரு முக்கிய தளமாக உருவெடுத்து உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்தது மகிழ்ச்சியளித்ததாக கூறியுள்ளார்.
தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளுதல், பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய அம்சங்களில் பிரிக்ஸ் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
வளரும் நாடுகளின் முன்னுரிமைகளுக்கு ஆதரவளித்தல், பாதுகாப்பான உலகை உருவாக்குதல் போன்றவற்றில் பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















