சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் வாழ்வாதாரமாக திகழும் மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த தண்ணீரை நம்பித்தான் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பொன்னம்பாளையம், மூலப்பாதை, குள்ளம்பட்டி, செட்டிபட்டி, புதுப்பாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, கத்தேரி வழியாக செல்லும் கிழக்குக்கரை கால்வாய், நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையம், வெப்படை வரை சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இதன் கிளை வாய்க்கால் பகுதிகளான தண்ணிதாசனூர், ஒக்கிலிப்பட்டி, வட்ராம்பாளையம், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, மஞ்சள், பருத்தி, சோளம், மக்காச்சோளம், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கால்நடை வளர்ப்பும் இந்த பாசனத்தை நம்பியே நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் இதுவரை கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கால்வாய் முழுவதும் வறண்டு காணப்படுகிறது.
கிணறுகளில் நீர்மட்டமும் குறைந்து வருவதால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் நிலக்கடலை, சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. கால்நடைகளுக்கான குடிநீர் தேவையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணை நிலையை ஆய்வு செய்து, கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே கிழக்குக்கரை பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
















