முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 18ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமின் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் இனிமேல் பேசமாட்டேன் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் 2 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி ஆணையிட்டார்.
















