மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான மசூத் அஸார் குறித்து தகவல் அளித்தால் 24 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ – முகமதுவின் தலைவர் மசூத் அஸார், 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவரை ஐ.நா., பாதுகாப்பு சபை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்தியாவிடம் அஸாரை ஒப்படைக்குமாறு 24 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு, பாகிஸ்தானை வலியுறுத்தி வருகிறது. மசூத் அஸார் தங்கள் நாட்டில் இல்லை என்றும், அவர் ஆப்கானிஸ்தானில் உள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், ஆப்கன் அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் தொடர் வலியுறுத்தலுக்கு பின் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு, மசூத் அஸாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
மேலும், அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு, 17.20 லட்சம் ரூபாய் வெகுமதி அளிப்பதாகவும் தெரிவித்திருந்தது. தற்போது அந்த பரிசுத் தொகையை, 24 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
















