முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்யை கண்டித்து கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக தரப்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தவெக வழக்கறிஞர் கார்த்திக் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், தனிநபர் குறித்து அவதூறாக பேசி பொது அமைதியை குலைக்க முயற்சித்தல், கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக எம்எல்ஏ சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 12ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், வடக்கு கடற்கரை போலீசார் சேகர்பாபு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆபாசமாக பேசுதல், தனிநபர் குறித்து அவதூறாக பேசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















