சவுதி மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அமெரிக்காவை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டது. இருப்பினும், இரு தரப்பினரும் இறங்கி வர மறுப்பதால் போர் தொடர்ந்து நீடித்தபடியே உள்ளது. ஈரானை எப்படியும் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணத்தில்தான் ட்ரம்ப் இந்த போரை தொடங்கினார். ஆனால், அவரது கணக்கு தவறாகிவிட்டது. அமெரிக்கா முன்வைக்கும் பிரதான கோரிக்கைகளை ஏற்க
ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
அதேநேரம், இந்த போர் காரணமாக அமெரிக்காவில் ட்ரம்பின் செல்வாக்கும் சரிந்து வருகிறது. எனவே, பொருளாதார நெருக்கடி, தேவையற்ற ராணுவ செலவுகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நீண்ட கால போர் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில் மோதலை விரைவில் முடித்துக்கொள்ளும் எண்ணத்திற்கு வந்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் இடைக்கால தேர்தலும் ட்ரம்பின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஆனால், ட்ரம்பின் இந்த முடிவுக்கு தற்போது முட்டுக்கட்டை போட்டுள்ளார்கள் ஏமனின் ஹவுதி அமைப்பினர்.
ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகப் போக்குவரத்து பெருமளவில் முடங்கியுள்ளது. எனவே, கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு மாற்றுப் பாதையாக செங்கடலின் பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) ஜலசந்தி பயன்படுத்தப்பட்டு வந்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 7 சதவீதமும், ஒட்டுமொத்த சர்வதேசக் கடல்சார் வர்த்தகத்தில் 12 சதவீதமும் இந்த செங்கடல் பாதை வழியேதான் நடைபெறுகிறது.
இந்த சூழலில், அல்-மோகா (Mocha)துறைமுகப் பகுதி மற்றும் செங்கடலின் நுழைவுவாயில் தீவான பெரிம் தீவை (Perim/Mayun Island) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் இந்த மாற்றுப் பாதையும் ஹவுதிக்களின் பிடிக்குச் சென்று, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இந்த திடீர் திருப்பம் சவுதி அரேபியாவிற்கு முன்னெப்போதும் இல்லாத கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் பாதை பாதிக்கப்பட்டதால், சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்றுப் பாதையாக செங்கடல் துறைமுகங்களையே முழுமையாக நம்பியிருந்தது. ஆனால் ஹவுதிகள் அங்கும் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் நிலைமையை சமாளிக்க முடியாமல், சவுதி தவித்து வருகிறது. இது தொடர்பாக, ட்ரம்பை தொடர்பு கொண்டு பேசிய சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஹவுதிகள் மீது உடனடியாக அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்ற அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தொடக்கத்திலேயே கூறியது போல, ஈரான் போரால் ட்ரம்பின் செல்வாக்கு ஏற்கனவே அதல பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது. போதாக்குறைக்கு அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் தேதி வேறு நெருங்கி வருகிறது. இந்த சூழலில், ஈரானுக்கு எதிரான போரை மேலும் விரிவுபடுத்தி ஏமனில் மற்றொரு போர் முனையை திறக்க ட்ரம்ப் சிறிதும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
அமெரிக்க ராணுவப் படைகளும், இடைமறிப்பு ஏவுகணைகளும் ஏற்கெனவே பெருமளவில் செலவிடப்பட்டுவிட்டதால், ஹவுதிகள் மீதான நேரடி ராணுவ தலையீட்டை ட்ரம்ப் நிராகரித்துவிட்டார். அதற்கு மாறாக, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்கள் எங்குள்ளன, எந்தெந்த இடங்களை அவர்கள் தாக்க திட்டமிடுகின்றனர் என்பது குறித்த செயற்கைக்கோள் மற்றும் உளவுத்துறை தரவுகளை வழங்குவதாக சவுதியிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள் சவுதி அரேபியாவில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இருந்தபோதிலும், ட்ரம்ப் தற்போது பொறியில் மாட்டிக்கொண்டதாகவே கருதப்படுகிறது. ஹவுதிகள் மீதான தாக்குதலை அமெரிக்கா தவிர்க்க நினைத்தால், உலகளவில் மீண்டும் எரிபொருள் விலையேற்றம் ஏற்படும். அத்துடன் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவுதியின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.
சரி, ஹவுதிகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றால், ஈரான் போர் பரப்பு மேலும் விரிவடையும். கூடுதல் ராணுவ செலவு ஏற்படும். அமெரிக்க மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும். இடைக்கால தேர்தலில் தோல்வியை சந்திக்க இது பிரதான காரணமாகவும் அமையலாம்.
எனவே, தற்போது இருதலைக் கொள்ளி நிலையில் அமெரிக்கா உள்ளது. இந்த சூழலில் என்ன செய்ய போகிறார் ட்ரம்ப்?. விடை, ஓரிரு நாட்களில் தெரிய வரலாம்..
















