விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதிகாலையிலேயே சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. மலைக்கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தாயுமான சுவாமி கோயில் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில் உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் சன்னதிகளில் தரிசனம் செய்தால், வாழ்வில் நலமும் வளமும் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதேபோல் விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ராஜகணபதி கோயில் முழுவதும் பழ வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
‘மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு ஆராதனை நடைபெற்ற நிலையில், ராஜகணபதி தங்க கவசத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து ராஜகணபதியை தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ராஜகோபுரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜகோபுர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சுமார் 9 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள விநாயகருக்கு எண்ணெய் காப்பு, சீயக்காய், பால், தயிர், சந்தனம், பன்னீர், மஞ்சள், விபூதி மற்றும் பல்வேறு பழ வகைகளைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வஸ்திரம் அணிவித்து, மலர் மாலைகள் சூட்டி, குருக்கள் தூப தீப ஆராதனை நடத்தினர். காஞ்சிபுரத்திலேயே பெரிய விநாயகரான ராஜகோபுரம் விநாயகரை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரியில் உள்ள உலகப் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து, விநாயகர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
















