செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் திரையில் தோன்றுவது நவம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் போலி அழைப்புகள் மற்றும் சைபர் மோசடிகளை தடுக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், உங்கள் கைபேசியில் ஒருவரின் தொலைப்பேசி எண் சேமிக்கப்படவில்லை என்றாலும், அவர் உங்களை அழைக்கும்போது அவரது பெயர் திரையில் தெளிவாகத் தோன்றும். வாடிக்கையாளர்கள் சிம் கார்டு பெறும்போது வழங்கிய ஆவணங்களில் உள்ள பெயர் திரையில் காண்பிக்கப்படும்.
எனவே, இனி அழைப்பவர் குறித்து அறிய ட்ரூகாலர் போன்ற தனியார் செயலிகளை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. அதேவேளையில், வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளில் பெயருக்கு பதிலாக ‘இண்டர்நேஷனல் கால்’ என்று திரையில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















