தென் சீனக் கடலில் சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ ஆதிக்கம் உலகளாவிய கவலையாக மாறியுள்ள நிலையில், இந்தியாவும் தனது பாதுகாப்பு வியூகத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியட்னாம் உடன் மேம்படுத்தப்பட்ட விரிவான வியூக கூட்டாண்மையை வளர்க்கும் வகையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அங்கு பயணம் மேற்கொண்டார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் “ACT EAST” (ஆக்ட் ஈஸ்ட்’) கொள்கையில் வியட்நாம் ஒரு மையப் புள்ளியாகத் திகழ்கிறது. வியட்நாமுடனான இந்தியாவின் கூட்டாண்மை, கடந்த மே மாதத்தில் மேம்படுத்தப்பட்ட விரிவான Enhanced Comprehensive Strategic Partnership நிலைக்கு உயர்த்தப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹனோய் சென்றிருந்தபோது, இந்தியாவும் வியட்நாமும் செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. குறிப்பாக சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வியட்நாமுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னதாக கடந்த ஜனவரியில் இந்தியாவும், வியட்நாமும் ஒரு இணையக் கொள்கை உரையாடலை நடத்தி இருந்தன.
தொடர்ந்து கடந்த செப்டம்பரில் தங்களின் முதல் இணையப் பாதுகாப்பு ஆலோசனையையும், அதற்கடுத்த மாதம் டெல்லியில் பொருளாதாரப் பாதுகாப்பு, கடல்சார் ஈடுபாடு, பயங்கரவாத எதிர்ப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இணையப் பாதுகாப்பு, கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்புப் பணிக்குழுவை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை இருநாடுகளும் நான்காவது துணை அமைச்சர்கள் மட்டத்திலான வெற்றிகரமாக நடத்தின.
ஏற்கெனவே தென் சீனக் கடலில் உள்ள வியட்நாமிற்குச் சொந்தமான கடல் பகுதிகளில், இந்தியாவின் ONGC விதேஷ் நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, வியட்நாமின் இறையாண்மைக்கு மதிப்பளித்து இந்தியா இப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 2ம் தேதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வியட்நாமின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் லுவோங் டாம் குவாங் (Luong Tam Quang) ஆகியோருக்கு இடையே வியட்நாம் தலைநகர் ஹனோயில் உயர்நிலை பிரதிநிதிகள் குழு அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன.
இந்தச் சந்திப்பானது இந்தியா-வியட்நாம் இடையே மேம்படுத்தப்பட்ட விரிவான Enhanced Comprehensive Strategic Partnership கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் வியட்நாமிற்கு பயணம் மேற்கொண்ட அஜித் தோவலுடன் வகைப்படுத்தப்பட்ட ரகசிய தகவல்களைப் பரஸ்பரம் பாதுகாப்பது மற்றும் பரிமாறிக்கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தை உருவாக்குவது குறித்து லுவோங் டாம் குவாங் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலான ‘இந்தோ-பசிபிக்’ கடல் பகுதியில் அமைதியையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்ட இந்தியா தனது அணுகுமுறைகளை மாற்றியுள்ளது.
இரு நாடுகளும் தங்களின் மூலோபாயப் பாதுகாப்பு மதிப்பீடுகளை மேம்படுத்தவும், பிராந்திய பாதுகாப்புச் சூழல் குறித்த தகவல்களை “நிகழ்நேரத் தரவுப் பரிமாற்றம்” முறையில் பகிர்ந்து கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளன.
வகைப்படுத்தப்பட்ட தகவல்களைப் பாதுகாத்து பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையுடன் சேர்த்து, மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான ஒப்பந்தம், காவலர் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான கூட்டு ஒப்பந்தம் ஆகியவற்றை விரைவுபடுத்துமாறு இந்தியாவிடம் வியட்னாம் கோரிக்கை வைத்துள்ளது.
வியட்நாம் போன்ற நாடுகளுடனான தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை இந்தியா வலுப்படுத்துவதன் மூலம், தென் சீனக் கடலில் எந்தவொரு ஒற்றை நாடும் குறிப்பாக சீனா முழு ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து, ஒரு பன்முகத்தன்மை கொண்ட பிராந்தியச் சமநிலையை உருவாக்கி வருகிறது.
















