தீபாவளி பண்டிகையை முன்னிட்டு “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாளை முதல் 7ஆம் தேதி வரை, கூட்டுறவு மொத்த பண்டகசாலை மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகளில் தேர்வு செய்யப்பட்ட 218 கடைகள் மூலமாகவும், சென்னையில் நான்கு நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலமாகவும் விற்பனை நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
காய்கறிகளைத் தனித்தனியாக விற்பனை செய்யக்கூடாது என்றும், ஒருவருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
















