வேலூர் அருகே காலி மதுபாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து புறப்பட்டு சென்றது. வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் அருகே வந்தபோது முன்னாள் காலி மதுபாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி கவிழ்ந்ததால் ஆயிரக்கணக்கான கண்ணாடி பாட்டில்கள் சாலையில் சிதறிய நிலையில், சொகுசு பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி எதிர்திசை சாலைக்குச் சென்றது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்து கிளீனர் ஆகிய இருவர் லேசான காயமடைந்தனர். விபத்து காரணமாக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரு மார்க்கங்களிலும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரும் சுங்கச்சாவடி ஊழியர்களும் இணைந்து போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















